பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும்3 பேருக்கு கொரோனா

பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.
பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும்3 பேருக்கு கொரோனா
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டர், மற்றொரு சப்இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் என மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 3 பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸ் நிலையத்தின் முன் தடுப்புகள் போடப்பட்டு உள்ளது.

சென்னையில் கனிமவளத்துறையில் வேலை பார்க்கும் பல்லாவரம் ராஜாஜி நகர் சரோஜினி தெருவைச் சேர்ந்த அரசு ஊழியருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் மூலம் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஐ.டி. நிறுவன ஊழியர், சேலையூர் அருகே வேங்கைவாசலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவருடைய மனைவி, குழந்தை மனைவி உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பம்மல் நகராட்சி அண்ணா நகர் பகுதியில் காய்கறி வியாபாரி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் 5 பெண்கள், ஒரு ஆண் என மேலும் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயது வாலிபர் உள்பட 4 பேருக்கு நேற்று, கொரோனா பாதிப்பு உறுதியானது. முடிச்சூரில் 26 வயது வாலிபருக்கும், பழைய பெருங்களத்தூரில் 2 பேருக்கும், சிட்லபாக்கம் பேரூராட்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் வரை செல்லும் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இதற்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து 30 வடமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு, மாம்பாக்கம் சாலையில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனம் அருகே ஒரே குடிசையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 26 வயது வாலிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com