நடிகை ரம்யாவின் பிறந்தநாள், கருப்பு தினம் சமூகவலைத்தளத்தில் ரசிகரின் ஆதங்க பதிவு

புட்டண்ணய்யா, அம்பரீஷ், விபத்தில் பலியான 30 பேர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தாத உங்கள் பிறந்தநாள் எனக்கு கருப்பு தினம் என்று நடிகை ரம்யாவுக்கு ரசிகர் ஆதங்கத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ரம்யாவின் பிறந்தநாள், கருப்பு தினம் சமூகவலைத்தளத்தில் ரசிகரின் ஆதங்க பதிவு
Published on

பெங்களூரு,

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை ரம்யா. காங்கிரசை சேர்ந்த இவர் மண்டியா தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். தற்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் சமூகவலைத்தள பிரிவு தலைவியாக பதவி வகித்து வருகிறார். அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடி பற்றி கருத்து வெளியிட்டு நடிகை ரம்யா சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அதுபோல் கடந்த சில ஆண்டுகளாக அவர் சொந்த ஊரான மண்டியாவில் நடக்கும் நல்லது, கெட்டதுக்கு செல்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் மறைந்த நடிகர் அம்பரீஷ் உடலுக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தாது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது. இதனால் நடிகை ரம்யாவுக்கு எதிராக தங்களது ஆதங்கத்தை ரசிகர்கள், எதிர்க்கட்சியினர், காங்கிரசார் கொட்டி தீர்த்துவருகிறார்கள்.

நடிகை ரம்யாவுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். அவருக்கு மண்டியாவை சேர்ந்த ரசிகரான குணசேகர் என்பவர் நடிகை ரம்யாவின் முகநூல் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இன்று உங்கள் பிறந்தநாள். ஆனால் நான் உள்பட உங்களது ரசிகர்களுக்கு இது சோக தினமாகும். நடிகர் அம்பரீஷ் இறுதிச்சடங்கில் நீங்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளீர்கள். இதனால் நீங்கள் கன்னட மக்களை பார்க்க இனி தகுதியற்றவர். மறைந்த அம்பரீஷ் எங்கே இருந்தாலும் அவர் மண்டியா மக்களை மறக்காமல் இருந்தார். நீங்கள் அப்படி இல்லை.

விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யா இறந்தபோதும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நீங்கள் வரவில்லை. கால்வாயில் பஸ் கவிழ்ந்து பலியான 30 பேருக்கும் இறுதி அஞ்சலி செலுத்த உங்களுக்கு மனது வரவில்லை. சாவிலும் கூட நீங்கள் அரசியல் செய்கிறீர்களா?. பதில் கூறுங்கள்.

டுவிட்டரில் மட்டும் இரங்கல் தெரிவித்துவிட்டு காலத்தை ஓட்டி வருகிறீர்கள். நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்கிறீர்கள் என நினைத்து நான் உங்களுக்கு ஆதரவாக எப்போதும் இருந்துள்ளேன். ஆனால் இப்போது உங்களிடம் இருப்பது விஷம் என்று எனக்கு தெரிகிறது. நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உங்களது பிறந்தநாள் அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, நோட்டு-புத்தகம் வழங்குவீர்கள்.

அப்போது எல்லாம் உங்களை நினைத்து பெருமைப்பட்டுள்ளேன். சமீபகாலமாக உங்களது செயல் என்னை போன்ற ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது. உங்களுக்கு ஆதரவாக பேசியதால் நான் இன்று எதிர்ப்பை சம்பாதித்துள்ளேன். உங்களது பிறந்தநாள் எனக்கு கருப்பு தினமாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தை பதிவிட்டுள்ள குணசேகர், மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ரம்யா போட்டியிட்ட போது அவருக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com