போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சிறையில் அடைப்பு சினிமா பிரபலங்கள் கலக்கம்

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சிறையில அடைக்கப்பட்டார். போதைப்பொருள் தொடர்பாக அவர் பலரின் பெயரை வெளியிட்டு இருப்பதால் சினிமா பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சிறையில் அடைப்பு சினிமா பிரபலங்கள் கலக்கம்
Published on

மும்பை,

இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். அவரது காதலனும், பிரபல இந்தி நடிகருமான சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் நடத்திய விசாரணையின் போது நடிகை ரியாவுக்கு போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் 3 நாள் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அன்று இரவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது, நடிகை ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நடிகர் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதால், நீதிமன்ற காவலுக்கு அனுப்புமாறு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கோரப்பட்டது. மேலும் ரியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து, அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பு

இந்தநிலையில் அன்று இரவு மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலக லாக்-அப்பில் நடிகை ரியா அடைக்கப்பட்டார். இதையடுத்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 10.30 மணி அளவில் பைகுல்லா சிறையில் அடைக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரை அழைத்து சென்றனர். பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட அவர், பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நடிகை ரியாவின் தம்பி சோவிக் மற்றும் நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கத்தில் திரையுலகம்

இதற்கிடையே போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக இந்தி திரையுலகை சேர்ந்த பலரது பெயரை விசாரணையின் போது நடிகை ரியா அம்பலப்படுத்தியதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com