போதை பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு

போதை பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு
Published on

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கை தற்போது சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக போதை பொருள் வாங்கியது, நிதி உதவி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங் வீட்டின் மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்டவர்களை கைது செய்து உள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீன் மனு

இதற்கிடையே ஜாமீன் கேட்டு ரியா மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், அவர் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் வலுகட்டாயமாக வாக்குமூலம் பெற்றதாகவும், வழக்கில் அவர் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதேபோல ரியாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என போதை பொருள் தடுப்பு பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள், ரியாவும், சோவிக்கும் போதை பொருள் வாங்கினர். சுஷாந்த் சிங்கிற்கு அவர் அறிவுறுத்தலின் பேரில் போதை பொருள் வாங்கி கொடுத்து உள்ளனர். போதை பொருளுக்கான பணத்தை ரியா வழங்கி உள்ளார். சில சமயம் சுஷாந்த் சிங் பணம் கொடுத்து உள்ளார். மேலும் சுஷாந்த் சிங் பயன்படுத்த திபேஷ் சாவந்தும், சாமுவேல் மிரண்டாவும் போதை பொருள் வாங்கி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜாமீன் மறுப்பு

நேற்று ரியா, சோவிக் மற்றும் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதில் நீதிபதி ஜி.பி. குராவ் ரியா உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

ரியா உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு அரசு தரப்பு வக்கீல் அதுல் சர்பான்டே வரவேற்பு தெரிவித்து உள்ளார். கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என ரியாவின் வக்கீல் சதீஸ் மானே ஷிண்டே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com