அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி

மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை சுமலதா, தனது கணவர் அம்பரீசின் சமாதியில் கண்ணீர் விட்டார். பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன் என்று கூறினார்.
அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் மறைந்த அம்பரீசின் மனைவி நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து சுமலதா பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் உள்ள தனது கணவரின் சமாதிக்கு நேற்று வந்தார். அங்கு தான் எம்.பி.யாக வெற்றி பெற்ற சான்றிதழை சமாதியில் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டார்.

அதன் பிறகு சுமலதா நிருபர்களிடம் கூறுகையில், நான் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை மண்டியாவில் கூட்ட முடிவு செய்துள்ளேன். மண்டியா மக்கள் என் மீது அன்பு செலுத்தியுள்ளனர். அவர்கள் சுயமரியாதை உள்ள மக்கள். எனது வெற்றிக்கு பாடுபட்டவர்களை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது. பா.ஜனதாவில் சேருவது குறித்து மண்டியா மக்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்வேன் என்றார்.

இதற்கு முன்பு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, மண்டியா தொகுதியில் நாங்கள் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர் வெற்றி பெற்றுள்ளார். எங்கள் கட்சிக்கு வருவமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்க மாட்டோம். ஆனால் அவர் கட்சிக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என்றார்.

சுமலதா, பா.ஜனதாவில் சேருவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காங்கிரசில் டிக்கெட் கிடைக்காததால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com