நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார் - இந்தியன் படத்தில் நடித்தவர்

நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார்.
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார் - இந்தியன் படத்தில் நடித்தவர்
Published on

மும்பை,

தமிழில் இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது46). இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் கோபால் செட்டியிடம் தோல்வி அடைந்தார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

இதற்கிடையே அவர் சிவசேனா சார்பில் மராட்டிய மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி.) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் மாநில அரசு 12 மேல்-சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர் பட்டியலை கவர்னருக்கு அனுப்பியது. இதில் ஊர்மிளாவின் பெயரும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நடிகை ஊர்மிளா நேற்று மும்பை பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார். முதல்-மந்திரியின் மனைவி ராஷ்மி தாக்கரே காவி கயிறை கட்டிவிட்டு ஊர்மிளாவை கட்சிக்கு வரவேற்றார்.

சிவசேனாவில் இணைந்தது குறித்து நடிகை ஊர்மிளா கூறியதாவது:-

சமீபத்தில் என்னிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களில் அதிக கேள்விகள் கங்கனா ரணாவத் பற்றியே கேட்கப்பட்டது. அவருக்கு தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக நினைக்கிறேன். தொடர்ந்து அவருக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டாம் என நினைக்கிறேன்.

மேல்-சபை உறுப்பினர் பதவிக்காக எனது பெயர் கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனது அரசியல் வாழ்வில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்காக பணியாற்ற விரும்புகிறேன். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது பணிகள் என்னை ஈர்த்தது. எனவே இந்த கட்சியில் சேரமுடிவு செய்தேன். உத்தவ் தாக்கரே என்னை தொடர்பு கொண்டு கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். கடந்த ஒரு ஆண்டில் பலத்த மழை, கொரோனா பிரச்சினையிலும் அரசு சிறப்பாக செயல்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com