

கம்மாபுரம்,
விருத்தாசலம் தாலுகா கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதனை ஊராட்சியில் புது விருதகிரிகுப்பம், பழைய விருதகிரிகுப்பம், வீரட்டிக்குப்பம், எடக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் புது விருதகிரிகுப்பம் மற்றும் பழைய விருதகிரிகுப்பம் ஆகிய 2 கிராமங்களிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 2 கிராமங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை. மேலும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும் இப்பகுதி மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் புது மற்றும் பழைய விருதகிரிகுப்பம் ஆகிய 2 கிராமங்களையும், முதனை ஊராட்சியில் இருந்து பிரித்து புதிய ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் மேற்கண்ட 2 கிராமங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2 கிராமங்களை சேர்ந்த மக்களும் நேற்று காலை சுப்பிரமணியர் கோவில் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் புது மற்றும் பழைய விருதகிரி குப்பம் ஆகிய 2 கிராமங்களையும் சேர்த்து புதிய ஊராட்சியாக உருவாக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்களது மனுவை வாபஸ் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பியபடி, கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், முதனை ஊராட்சியில் இருந்து புது மற்றும் பழைய விருதகிரி குப்பம் ஆகிய 2 கிராமங்களையும் பிரிக்க வேண்டும். மேலும் இந்த 2 கிராமங்களையும் சேர்த்து புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.