ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் மருத்துவமனைகளை சேர்க்கலாம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வூதியர்களுக்கான மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் கூடுதல் மருத்துவ மனைகளை சேர்க்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் மருத்துவமனைகளை சேர்க்கலாம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தமிழகத்தில் அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உடல் நலக்குறைவுக்காக மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு அதற்கான செலவுத்தொகையை கேட்டு அரசுக்கு விண்ணப்பித்து, பின்னர் அந்த தொகையை திரும்ப பெறுவதும் வழக்கம். ஆனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளின் பட்டியலில் இல்லை, அவர்கள் எந்த நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார்களோ, அந்த நோய் அரசு அறிவித்துள்ள நோய்களின் பட்டியலில் இல்லை, வெளிமாநில மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றார்கள் என்ற காரணங்களை கூறி, செலவுத்தொகை வழங்க மறுக்கப் படுகிறது.

இவ்வாறு மருத்துவ செலவு தொகையை திரும்ப வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, உரிய செலவுத்தொகையை வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அரசு ஊழியர்கள் பலரும், ஓய்வூதியர்கள் பலரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி வாதாடுகையில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்த ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. 1.7.2018 முதல் இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் திறக்கப்பட உள்ளது என்றார்.

விசாரணை முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் நீட்டிப்பு செய்யலாம். தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் அது இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது. இந்த ஒப்பந்ததில் புதிதாக 110 தனியார் மருத்துவமனைகளை சேர்க்க உள்ளதாக அரசு தரப்பில் கூறியுள்ளனர். ஒப்பந்தத்தின்போது மேற்கண்ட மருத்துவமனைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் வருகிற 17-ந்தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com