ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16–ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.
ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு
Published on

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டலமகர விளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நடைபெறும் நாட்களில் கேரளா, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை, வழிபாடு நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

கோவில் கருவறை மற்றும் சன்னிதானத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 17ந் தேதி முதல் 21ந் தேதி வரை 5 நாட்கள் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற நிறை புத்தரிசி பூஜை சபரிமலையில் ஆகஸ்டு 15ந் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com