தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம் - போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேச்சு

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தன்மை இருந்தால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம் - போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேச்சு
Published on

புதுச்சேரி,

புதுவை காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு ஏற்படும் மனஉளைச்சல் மற்றும் மனஅழுத்தத்தின் காரணமாக உடல் பருமன் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண்பது தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கிழக்கு பகுதிக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாருக்கு மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பான பயிற்சி முகாம் முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கி, பயிற்சி முகாமினை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு போலீசாரும் ஒவ்வொரு வகையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் மனதில் உள்ள அழுத்தத்தை 100 சதவீதம் நம்பிக்கை உள்ள மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே முழுமையான தீர்வு காண முடியும். தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலம் இது போன்ற மன அழுத்தத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும். ஈகோவை கைவிட்டாலே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியில் உழவியல் நிபுணர் அருண் தீப்பாஞ்சான் கலந்துகொண்டு மனஅழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது, இதன் மூலம் எந்தெந்த நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறோம், உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகள் என்னென்ன என போலீசாருக்கு விளக்கி கூறினார். மேலும் மன அழுத்தம் தொடர்பாக காவலர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில் குமார், அறிவுச்செல்வம், ஜெய்சங்கர் மற்றும் பெரியகடை, முத்தியால்பேட்டை, ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, காலாப்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர். முடிவில் போலீசாரின் குறைகள் கேட்டகப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com