அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம்

அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் நடந்தது.
அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணி சாமி கோவிலில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி யாகம், வழிபாடு மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக்குமார், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சியால் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க, தமிழக அரசு ஏற்கனவே ரூ.710 கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தினமும் தண்ணீர் கொண்டு செல்வதாக அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தி.மு.க. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக போராட்டங்கள் நடத்துகிறார்கள். இதில், எந்த ஒரு அரசியல் ஆதாயம் பெற முடியாது. தமிழக அரசு அறிவுபூர்வமாக செயல் திட்டங்களை தீட்டி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை சீற்றங்கள் பிரச்சினையை அனைவரும் ஒன்றிணைந்து தான் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் காத்தவராயன், முனிவெங்கடப்பன், தென்னரசு, மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, நகர செயலாளர் கேவசன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூர் ராம் நகரில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. இதற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். நிர்வாகி ஜெயராம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது யாக பூஜை மற்றும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் எஸ்.ஜோதி, மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், ஓசூர் நகர செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் சரஸ்வதி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com