

கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ். இவர், மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பொறுப்பில் உள்ளார். கரூர் 80 அடி சாலையில் அவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் கரூர் அருகே பாலம்மாள்புரத்தில் காமராஜூவின் மகன், மனைவி பெயரில் நிலம் உள்ளதாக தெரிகிறது.
இதில் அவரது மகன் நிலத்தை விலைக்கு வாங்கிய, நாமக்கல் மோகனூரை சேர்ந்த சிலர் அதில் நேற்று வேலியிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பக்கத்தில் தனது மனைவியின் பெயரில் உள்ள நிலத்திலும் வேலியிட்டதாக கூறி, அந்த நபர்களை காமராஜ் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் சிலர், காமராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த காமராஜ், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அவரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த தாக்குதல் குறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.