

அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான நேற்று அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாம்பட்டி, முதலிப்பட்டி, வயலோகம், அகரப்பட்டி, ஆயிப்பட்டி, தச்சம்பட்டி, நிலையப்பட்டி, எலுவிச்சபட்டி, விசலூர், அண்ணாநகர், ஓச்சப்பட்டி, கீழஓச்சப்பட்டி, குடுமியான்மலை, கீழப்பாறைக்களம், மரிங்கிபட்டி, அரியமுத்துப்பட்டி, உருவம்பட்டி, மேலப்பாறைக்களம், சீகம்பட்டி, உப்புப்பாறை, புதுப்பட்டி, காரசூராம்பட்டி, காப்புக்குடி, புளியந்தோப்பு, கடம்பராயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
குடுமியான்மலை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், புகழ்பெற்ற குடுமியான்மலையில் 80 ஆண்டுகளுக்கு பின்பு புதிய தேர் செய்யப்பட்டு ஓட செய்துள்ளேன். கஜா புயல், கொரோனா கால கட்டங்களில் அனைத்து உதவிகளையும் உங்களை தேடிவந்து செய்து கொடுத்துள்ளேன். கொரோனா காலத்தில் உங்களது சிரமங்களை போக்க தொகுதி முழுவதும் வந்து உங்களது வீட்டு கதவை தட்டி அனைத்துவித மருந்து, மாத்திரைகளையும் வழங்கி உள்ளேன்.
மேலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நகைக்கடன், பயிர்க்கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் நலன்கருதி விலையில்லா சைக்கிள், பாடப்புத்தகங்கள், பஸ் பாஸ் உள்ளிட்ட எண்ணற்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா பரிசு பெட்டகம், அம்மா இருசக்கர வாகனம் வழங்க நிதி உதவி, கர்ப்பிணிகளுக்கு பிரசவ கால நிதிஉதவி உள்ளிட்ட பலவகையான உதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 நிதி உதவி, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆகவே, வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அகரப்பட்டிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றபோது வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்கள் அவரது கையை பிடித்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர். உருவம்பட்டியில் மூதாட்டி ஒருவர் விஜயபாஸ்கருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் உருவம்பட்டியில் கட்சி கொடியினை ஏற்றினார். அப்போது அப்பகுதியில் உள்ள மாற்றுக் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் அன்னவாசல் பகுதியை சேர்ந்த திரளான இஸ்லாமிய பெண்கள் வண்ணாரப்பட்டி நான்குரோடு அருகே அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.