‘அ.தி.மு.க. ஆட்சி தொடர இளைஞர்கள் பாடுபட வேண்டும்’ பாசறை மாநில செயலாளர் பரமசிவன் எம்.எல்.ஏ. பேச்சு

அ.தி.மு.க. ஆட்சி தொடர இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று பாசறை மாநில செயலாளர் பரமசிவன் எம்.எல்.ஏ. கூறினார்.
‘அ.தி.மு.க. ஆட்சி தொடர இளைஞர்கள் பாடுபட வேண்டும்’ பாசறை மாநில செயலாளர் பரமசிவன் எம்.எல்.ஏ. பேச்சு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது பாசறை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

இளைஞர்கள் அரசியலில் சாதிக்க அ.தி.மு.க. தான் சரியான இயக்கம் என்பதை உணர்த்துவதற்கு தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கட்சியில் உழைப்பை முதலீடு செய்தால் உயர்வு கட்டாயம் கிடைக்கும். விசுவாசத்தை முதலீடு செய்தால் பதவி நிச்சயம் கிடைக்கும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். தினமும் ஒவ்வொரு சட்டமும், திட்டமும் செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து திட்டங்களை தீட்டி வருகிறார்.

அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் கடுமையாக உழைத்து பாடுபட வேண்டும். இளைஞர்கள் இந்த கட்சியில் சேர்ந்து இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் சொல்ல வேண்டும். இந்த அரசின் சாதனைகளை புதிய யுகத்திற்கு ஏற்ப மக்களிடம் எடுத்துக் சொல்ல வேண்டும். பாசறை நிர்வாகிகள் தற்போது தேர்தல் பணியை தொடங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், அ.தி.மு.க.வில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையை ஜெயலலிதா 2008-ம் ஆண்டு தொடங்கினார். அப்போது அதில் நான் உறுப்பினராக இருந்தேன். தற்போது நான் அமைச்சராக உயர்ந்து உள்ளேன். அதைப்போல் இந்த கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி நிச்சயம் கிடைக்கும். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அதற்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும். இளைஞர்கள் இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. மாநில செயலாளர் டாக்டர் பரமசிவன் எம்.எல்.ஏ.வுக்கு நீர்வாழ் பரிசு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரியபெருமாள், எஸ்.கே.எம்.சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பிரமணியன், விஜயகுமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட அவைத்தலைவர் தேவா காபிரியேல் ஜெபராஜன், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com