கொல்லங்கோடு பகுதியில் டாஸ்மாக் கடையில் முன்கூட்டியே டோக்கன் வினியோகம் - கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு

கொல்லங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் முன் கூட்டியே டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லங்கோடு பகுதியில் டாஸ்மாக் கடையில் முன்கூட்டியே டோக்கன் வினியோகம் - கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு
Published on

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 மது கடைகள் உள்ளன. இதில் தமிழக-கேரள எல்லை பகுதியான ஊரம்பு பகுதியில் உள்ள கடை மட்டும் திறக்கபடவில்லை. இதனால் ஊரம்பு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் நடைக்காவு மற்றும் கண்ணனாகம் பகுதியில் உள்ள கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

கண்ணனாகத்தில் கடை இருக்கும் பகுதியில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தடுப்பையும் தாண்டி மேடவளாகம் வரை மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வீதம் கொடுக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் கண்ணனாகம் பகுதியில் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்தில் 70 டோக்கன் வினியோகித்து மதுவும் விற்பனை செய்யப்பட்டது. மதுவாங்க வந்தவர்கள் சாக்கு பைகளை கைவசம் எடுத்து வந்திருந்தனர். ஒவ்வொருவரும் சுமார் 20 முதல் 25 குவாட்டர் மது பாட்டில்கள் வரை வாங்கி சென்றனர். கண்ணனாகம் மதுக்கடையில் பிற்பகல் 3 மணி அளவில் அனுமதிக்கபட்டிருந்த 500 டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டு மதுவும் வழங்கி முடித்தனர்.

இந்த நிலையில் மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றிருந்தனர். உடனே அவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை மது வாங்க வசதியாக 140 பேருக்கு டோக்கனை முன் கூட்டியே வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் நடைக்காவு பகுதியிலும் கூட்டம் காலை முதலே அலைமோதியது. கூட்டத்தை பார்த்த போலீசார் மதுக்கடைக்கு அருகில் உள்ள ஒரு மைதானத்தில் மது பிரியர்களை வரிசையில் உட்கார வைத்து பத்து நபர்கள் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு மது வாங்க கடைக்கு வரிசையாக அனுப்பி வைத்தனர்.

நடைக்காவு பகுதியில் உள்ள கடைக்கு பகல் 2 மணியளவில் முதியவர் ஒருவர் டோக்கன் வாங்க வரிசையில் அமர வந்தார். அவர் மது வாங்க வந்த போது முகக்கவசம் அணிந்திருந்தால் தான் மது வழங்குவார்கள் என கூறி உள்ளனர். உடனே கைவசம் எந்த முகக்கவசமும் இல்லாததால் அருகில் உள்ள ஒரு கடையில் ஓடி சென்று ஒரு பிளாஸ்டிக் கவரை வாங்கி முகக்கவசமாக அணிந்து வந்தது வரிசையில் உட்கார்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல், அந்த கவர் முகக்கவசத்துடனேயே நீண்ட நேரம் வரிசையில் அமர்ந்து இருந்து மது வாங்கி சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com