ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்,

மத்திய வருமானவரித்துறை ஆய்வின் மூலம் முதல்-அமைச்சரின் சம்பந்தி தொடர்பான மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள், துணை முதல்-அமைச்சரின் உறவினர்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு, குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோருடைய தொடர்பு என பல்வேறு ஊழல் குற்றசாட்டுகள் பொதுவெளிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊழல் அ.தி.மு.க. அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் செப்டம்பர் 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கோவை சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் கரூர் நகருக்கு வந்து, பின்னர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:- ஊழல் கறைபடிந்த அ.தி.மு.க. அரசின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடுத்துக்கூறி அதில் தொடர்புடையவர்கள் பதவி விலகக்கோரியும், ஊழலில் சிக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் கரூர் மாவட்டம் அமராவதி, காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், நீர்மேலாண்மையை மேம்படுத்துவதில் அரசு அக்கறை செலுத்தாததால் 3 முறை மேட்டூர் அணை நிரம்பியபோதும் கூட கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. எனவே வாய்க்கால்களை தூர்வாரி கடைமடைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். கரூர் மாவட்டத்தில் தாதம்பாளையம், பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். புகளூரில் தடுப்பணை கட்ட வேண்டும். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். கரூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்க விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும். தோகைமலை வாரசந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, மாநில சட்ட பிரிவு இணை செயலாளர் வக்கீல் மணிராஜ், மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் எம்.ரகுநாதன், கே.கருணாநிதி, நகர செயலாளர் கனகராஜ், வாசுகி அறக்கட்டளை தலைவர் தளவை ஆர்.முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.வி.ஆர்.வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு, வட்ட பிரதிநிதி தோரணக்கல்பட்டி இளங்கோவன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக, வார்டு நிர்வாகிகள், அணி செயலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றதால் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் அருகே கோவை சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 150-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com