தூத்துக்குடியில் 10 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு சென்றன

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இதில் 20 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள 163 படகுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் 10 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு சென்றன
Published on

தூத்துக்குடி,

இந்த படகுகள் கடந்த 10 மாதங்களாக கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படகுகளை மத்திய கப்பல் துறை உதவியுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவு அடிப்படையில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளை பதிவு செய்ய வேண்டும். தடைக்காலம் முடிந்த பிறகு தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு 24 மீட்டர் நீளம், 240 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட விசைப்படகுகளை பதிவு செய்ய அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட 91 விசைப்படகுகள் உள்பட 177 படகுகள் நேற்று காலையில் கடலுக்கு சென்றன. பதிவு செய்யப்படாத படகுகளும் கடலுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

அரசு உத்தரவுப்படி 24 மீட்டர் நீளம், 240 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட படகுகளை பதிவு செய்து மீன்பிடி தொழிலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இதுவரை 100 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்று (அதாவது நேற்று) பதிவு செய்யப்படாத படகுகளும் மீன்பிடிக்க சென்று உள்ளன. இது தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 24 மீட்டருக்கு மேல் உள்ள படகுகளை மத்திய கப்பல்துறையில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இதேபோன்று அனைத்து படகுகளும் சட்டப்படி பதிவு செய்துதான் மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்கப்படுகிறது. நாட்டுப்படகுகளும் விதிமுறையை மீறி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com