20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காளைவிடும் திருவிழா - மாடுகள் முட்டி 15 பேர் காயம்

ஜோலார்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 15 பேர் காயமடைந்தனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காளைவிடும் திருவிழா - மாடுகள் முட்டி 15 பேர் காயம்
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காளைவிடும் திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடவிடப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் மாரியம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். இதனையொட்டி காளைவிடும் திருவிழா நடத்தப்படும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக காளைவிடும் திருவிழா நடத்தப்படவில்லை.

தற்போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கு தடைநீக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் காளைவிடும் விழா நடத்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி நேற்று காளைவிடும் திருவிழா நடந்தது. இதற்காக திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, முத்தம்பட்டி, நிம்மியம்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன.

விழா நடந்த பழைய சந்தைமைதானத்தில் இருந்து ஏரிக்கரை வரை காளை ஓடும் பாதையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த காளைகளுக்கு தண்ணீர் வசதி, தீவனம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்கள் முத்துச்செல்வன், தில்லைவாணன் ஆகியோர் பரிசோதனை செய்து தகுதியான காளைகளை களம் இறக்க அனுமதி அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை கோவிலில் ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின்னர் ஊர்க் காளைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காளை விடும் விழாவை ஊர்கவுண்டர் சக்திவேல் தொடங்கி வைக்க முதலாவதாக ஊர்க்காளை ஓடவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவை சீறிப்பாய்ந்து கழுத்திலும் கொம்புகளிலும் கட்டப்பட்டிருந்த சலங்கைகள் சத்தத்துடன் ஓடின.

காளை ஓடும் பாதையின் இருபுறமும் வேடிக்கை பார்க்க திரண்டிருந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆரவாரம் செய்தனர். சிறுத்தைகள் போல் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் அதன் திமிலை தட்டுவதற்கு நெருங்கியபோது மாடுகள் வந்த திசையிலேயே திரும்பி அவர்களை முட்டுவதற்காக பாய்ந்தன. அப்போது இளைஞர்கள் அலறியடித்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து தப்ப முயன்றனர். எனினும் மாடுகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த நடமாடும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 35-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டதோடு ஜாக்பாட் பரிசும் வழங்கப்பட்டன. விழா நடைபெறுவதை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com