8 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு சமயபுரம் கோவில் யானை இயல்பு நிலைக்கு திரும்புகிறது

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரியில் தொடர்ந்து 8 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சமயபுரம் கோவில் யானை மசினி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
8 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு சமயபுரம் கோவில் யானை இயல்பு நிலைக்கு திரும்புகிறது
Published on

ஒரத்தநாடு,

திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் யானை மசினிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோர்வடைந்த இந்த யானையால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் திருச்சிக்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் யானையின் முன் கால் மற்றும் அடி வயிற்று பகுதியில் ஏற்பட்ட வீக்கம் குறையவில்லை.

இதனால் இந்த யானை கடந்த 13-ந்தேதி இரவு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) மோகன் தலைமையில் மருத்துவர்கள் பழனிச்சாமி, செல்வராஜ், வீரசெல்வம், செந்தில்குமார், சுரேஷ்குமார் ஆகியோரை கொண்ட குழுவினர் யானைக்கு கடந்த 8 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொறுப்பு) மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

யானை மசினி கடந்த 13-ந் தேதி இரவு ஒரத்தநாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் மருத்துவ குழுவினரால் ஷிப்டு முறையில் இரவு, பகல் என 24 மணி நேரமும் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை முறை குறித்து ஆலோசனை பெறப்பட்டு அதன்படியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு யானையின் கால்பகுதி வீக்கமும், வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கமும் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் யானை புல், தண்ணீர், ஊறவைத்த அவல் உள்ளிட்ட உணவுகளை நன்கு உட்கொள்கிறது. மேலும் அருகம்புல்லை விரும்பி சாப்பிடுகிறது.

சிகிச்சைக்கு வந்த முதல் நாளில் யானை 10 மீட்டர் தூரம் மட்டுமே நடைபயிற்சியில் ஈடுபட்டது. தற்போது 2 கிலோ மீட்டர் தூரம் வரை சிரமம் இன்றி நடைபயிற்சி செல்கிறது. இன்னும் 1 வாரம் யானையை இங்கு வைத்து தொடர் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த இடம் யானைக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனால் யானை மிகுந்த சாந்தத்துடன் காணப்படுகிறது. மருத்துவர்கள், மாணவர்கள் யார் சென்றாலும் அவர்களிடம் இயல்பாக நடந்து கொள்கிறது. உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை இயல்பு நிலைக்கு வேகமாக திரும்புகிறது.

இந்த யானையை அனுப்பி வைக்கும்போது யானை பராமரிப்பு உள்ளிட்ட சில மருத்துவ ஆலோசனைகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க உள்ளோம். தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற்று முதற்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் கோவில்களில் யானைகளை பராமரிக்கும் வேலையில் ஈடுபடுவோரை வரவழைத்து மருத்துவ ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com