3 நாள் விசாரணைக்கு பின் மோசடி நிதி நிறுவன அதிபர் ஜெயிலில் அடைப்பு

பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் 3 நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு பின்பு மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3 நாள் விசாரணைக்கு பின் மோசடி நிதி நிறுவன அதிபர் ஜெயிலில் அடைப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பிரவீன் (38). இவர் வெட்டூர்ணிமடம் மற்றும் மார்த்தாண்டம், நெய்யாற்றின்கரை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்ததாக புகார் வந்தது. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் நிதி நிறுவனத்தின் இயக்குனர் விழுந்தயம்பலம் பனங்காலவிளையை சேர்ந்த சோபன் (42) மற்றும் முகவரான அருமனை மாத்தூர்கோணம் செம்மண்விளையை சேர்ந்த ரெதீஸ் (40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பிரவீனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மோசடி செய்த பணத்தை கொண்டு பிரவீன் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்தது. அந்த சொத்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். பிரவீனின் சொத்துக்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்ட சந்தாதாரர்களுக்கு வழங்க போலீசார் முடிவு செய்து அற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதோடு நிதி நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கையும் நெய்யாற்றின்கரை கிளை நிறுவன பெண் மேலாளரிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். மேலும் சில ஆவணங்களும் அந்த பெண் மேலாளரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை நாளை (புதன்கிழமை) போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்ட பெண் மேலாளருக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

இதற்கிடையே கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். பிரவீனிடம் நடத்திய விசாரணையில் மோசடி வழக்கில் 17 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்ததும் 17 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பிரவீனை காவலில் வைத்து விசாரிப்பதற்கு கோர்ட்டு வழங்கிய அவகாசம் முடிவடைந்ததால் நேற்று காலை பிரவீனை போலீசார் மீண்டும் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதுபற்றி துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டி கூறும்போது, "பிரவீனை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதால் அவர் வாங்கிய சொத்து விவரங்கள் கிடைத்தன. குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சொத்துக்களை அவர் வாங்கி உள்ளார். அதன் மதிப்பு சரியாக இன்னும் கணக்கிடப்படவில்லை. அவற்றின் மதிப்பு எவ்வளவு? என்பதை அறிய ஒவ்வொரு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். சொத்துக்களின் மதிப்பு கிடைத்ததும் அவற்றை வருவாய்த்துறை மூலமாக விற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மோசடி நிதி நிறுவனத்தால் குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 450 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்க தயக்கம் காட்டுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில் தயக்கம் காட்டலாம். ஆனால் புகார் அளிப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தைரியமாக புகார் அளிக்கலாம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com