தாரமங்கலம் அருகே பதவி ஏற்பு முடிந்ததும் இரு தரப்பினர் இடையே கடும் மோதல்; ஊராட்சிதலைவர் உள்பட 10 பேர் காயம்

தாரமங்கலம் அருகே ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு முடிந்ததும் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தாரமங்கலம் அருகே பதவி ஏற்பு முடிந்ததும் இரு தரப்பினர் இடையே கடும் மோதல்; ஊராட்சிதலைவர் உள்பட 10 பேர் காயம்
Published on

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம் கருக்கல்வாடி ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பதவிக்கு கடந்த மாதம் 27-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாப்பா கணேசன் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.

இருதரப்பினருக்கும் தலா 6 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதனால் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இருதரப்பினர் இடையே கடும் போட்டி நிலவியது. துணைத்தலைவராக யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் கருக்கல்வாடி பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் தலைவராக பாப்பா கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது துணைத் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக கவுன்சிலர்களை தங்கள் தரப்புக்கு இழுப்பது தொடர்பாக பாப்பா கணேசன், ராஜேந்திரன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் உருட்டு கட்டையால் தாக்கிக்கொண்டனர். கற்கள் வீசப்பட்டன. இந்த மோதலில் ஊராட்சி தலைவர் பாப்பா கணேசன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

அப்போது பாப்பா கணேசன் தரப்பினரின் மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்ததும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனர். காயம் அடைந்த பாப்பா கணேசன் உள்பட 10 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மோதல் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com