சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நாராயணசாமி தகவல்

புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக புதுச்சேரியிலும் தி.மு.க. சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் வருகிற 8-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி காமராஜர் சிலை அருகில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாள முயற்சி செய்கிறது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடமாநிலங்கள் பற்றி எரிகிறது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மராட்டியம், புதுச்சேரி மாநிலங்களிலும் தொடர் போராட்டம் நடக்கிறது.

புதுவை மாநிலத்தில் எக்காரணத்தைக்கொண்டும் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். இதனை முழுமையாக எதிர்ப்போம். வருகிற 12-ந்தேதி சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட உள்ளோம். இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நானே தீர்மானம் கொண்டுவர உள்ளேன்.

இந்த சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கமாட்டேன். இதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் குமாரவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com