சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர்.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஏற்கனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் நேற்று சபாநாயகர் சிவக் கொழுந்துவை சந்தித்து கடிதம் கொடுக்க சட்ட சபைக்கு வந்தனர்.

அப்போது சபாநாயகர் சட்டசபை அலுவலகத்தில் இல்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக முதல்-அமைச்சரின் பத்திரிகை செய்தி மூலம் அறிகிறோம்.

குடியுரிமை விவகாரம் மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. எனவே இதுபற்றி விவாதிக்க சட்டசபைக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருக்க இதுதொடர்பாக ஏதேனும் விவாதம் என்றால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். எனவே குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தால் புதுச்சேரியில் யாரும் பாதிக்கப்படாத நிலையில், முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது அரசியல் லாபத்துக்காக மக்களை ஏமாற்ற சட்டசபையை கூட்டி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்போவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்து புதுச்சேரி அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com