அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கு: மாவோயிஸ்டு ஷோபா ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கில் மாவோயிஸ்டு ஷோபா ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கு: மாவோயிஸ்டு ஷோபா ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மாவோயிஸ்டுகள் வந்து சென்றனர். அவர்கள் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களிடம் அரசுக்கு எதிராகவும், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி போஸ்டர்களை ஒட்டினர். இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுகல்கம்பை கிராமத்துக்கு வந்து சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் கோவையை சேர்ந்த டேனிஷ் என்ற கிருஷ்ணனை கேரள போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வழக்கில் சம்பந்தப்பட்ட கர்நாடகா மாநிலம் மேல்கங்கா பகுதியை சேர்ந்த ஷோபா என்பவரை தமிழக போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் நெடுகல்கம்பை கிராமத்துக்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஷோபா ஊட்டிக்கு அழைத்து வரப்பட்டு மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அரசு தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபாவை 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். தொடர்ந்து போலீசார் ஷோபாவை பாதுகாப்புடன் வாகனத்தில் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

ஊட்டி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஷோபா ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வில்லை. அதற்கு பதிலாக கோவை சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com