

பழனி:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் ஆகியவை சார்பில் பழனியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. நிர்வாகி பிச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் கைகளை கோர்த்து நீண்ட வரிசையில் நின்றனர்.
அப்போது, மத்திய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, தொழிலாளர் நலச்சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.