காமநாயக்கன்பாளையம் அருகே பரபரப்பு, விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - 10 பேர் கைது

காமநாயக்கன்பாளையம் அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி விட்டு நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காமநாயக்கன்பாளையம் அருகே பரபரப்பு, விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - 10 பேர் கைது
Published on

காமநாயக்கன்பாளையம்,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை இணைந்து திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்பட 14 மாவட்டங்களில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்அழுத்த மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடும் ஆட்சேபனையை மீறி காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை மிரட்டியும், அச்சுறுத்தியும் திட்ட பணிகளை நிறைவேற்றி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை காமநாயக்கன்பாளையத்தை அடுத்த சாலையூர், காளியப்பன்கவுண்டன் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் பவர்கிரிட் நிறுவனத்தினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்புடன் நில அளவீட்டு பணியில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த விவசாயிகள் அளவீடு மேற்கொள்ள கூடாது என அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவள்ளி, பல்லடம் தாசில்தார் சாந்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, விவசாய சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், வெங்கடாசலம் உள்ளிட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் தங்களுக்கு வெளிச்சந்தை அடிப்படையில் 4 மடங்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். சிறுகுறு விவசாயிகளின் நிலங்களை முழுமையாக எடுத்துக்கொண்டு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டு அளவீடு பணி மேற்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினர்.

இதனை அதிகாரிகள், ஏற்றுக்கொள்ளாததால் விவசாய சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பார்த்தசாரதி, சோமசுந்தரம், வெங்கடாசலம், சுப்பிரமணியம் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் விவசாயிகள் கைது செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. உடனே விவசாயிகள் மற்றும் 20 பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் அளவீடு பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தோட்டங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெளியேறு, வெளியேறு, பவர்கிரிட் நிறுவனமே வெளியேறு, காவல்துறையே, காவல்துறையே விவசாயிகளின் நிலங்களை அத்துமீறி பிடுங்கும் பவர்கிரிட் நிறுவனத்திற்கு துணை போகாதே என்று கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் போலீசார் விவசாயிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திவிட்டு நிலம் அளவீடு பணி மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண் தனது குழந்தையுடன் அமர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீசார் அப்புறப்படுத்தி விட்டு நில அளவீடு பணியை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைதான விவசாயிகள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த விவசாயிகளை உழவர் உழைப்பார் கட்சி மாநில தலைவர் கு.செல்லமுத்து சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை போல விவசாயிகள் மீது போலீசார் அடக்கு முறையில் ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுவும் பெண்கள் என்றும் பராமல் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய சம்பவம் வேதனை தரக்கூடிய செயல் ஆகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவைதான், அடக்கு முறையில் ஈடுபட்ட போலீசாரும் சாப்பிடுகிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com