

தஞ்சாவூர்,
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். நெல், கோதுமை, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகிய விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைகளை சட்டமாக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விவசாய விளை பொருட்களுக்கு நியாயவிலையை வழங்க வேண்டும்.
அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுகாலை ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், மாநகர மாவட்ட விவசாய அணி தலைவர் ஜேம்ஸ், பொதுச் செயலாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமிநாராயணன், கோவி.மோகன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு ஏர் கலப்பை, நெற்கதிர்கள், கரும்புகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் இவர்கள் தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலையை நோக்கி ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து மினிபஸ், வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.