

கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குனராக (உரம்) பணியாற்றி வருகிறார்.
இவர் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திற்கு வரும் மேலாண்மை இயக்குனர்களிடமும் (தரக்கட்டுப்பாடு) மற்றும் உர விற்பனையாளர்களிடமும் மாதா மாதம் மாமூல் பெறுவதாகவும் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவும், சென்னை மாவட்ட ஆய்வுக்குழுவும் சேர்ந்து கடந்த 23-ந் தேதி இரவு முதல் 24-ந்தேதி அதிகாலை வரை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் இருதுறை கூட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது லஞ்சமாக பெறப்பட்டதும், லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்ததுமான ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500 சங்கரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், சங்கரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துண்டுச் சீட்டில் மாதா மாதம் அவர் உர நிறுவனங்களிடம் லஞ்சமாக வசூல் செய்த லட்சக்கணக்கான ரூபாய்க்கான குறிப்புகளும் இருந்தது. மேலும் இது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்ததில், வீட்டு பத்திரம், சங்கர் தனது தம்பி ராஜேந்திரன் பெயரில் நல்லாத்தூரில் வாங்கிய விதை பண்ணைக்குரிய இடம், உறவினர்கள் பெயரில் ராவத்தநல்லூரில் 3 ஏக்கர் விளைநிலமும், பூட்டை கிராமத்தில் 4 ஏக்கர் நிலம், மாடி வீடு வாங்கியதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட 57 முக்கிய ஆவணங்கள் சிக்கின.
மேலும் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள், 26 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் போலீசாரிடம் கொடுக்கப்பட்டதால், 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரம் சங்கர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சங்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 57 முக்கிய ஆவணங்களுடன் புறப்பட்டு சென்றனர்.
இதேபோல் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விதை பண்ணையிலும் சோதனை மேற்கொண்டனர். சங்கர் விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் வேலை பார்த்த போது, பல்வேறு திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.10 கோடி வரை மோசடி செய்து, வீட்டு மனை உள்ளிட்டவை வாங்கி இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.