

சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேளாண் இணை இயக்குனர் செந்தமிழ் செல்வன், கூட்டுறவுச்சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லத்துரை உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது பற்றியும் பேசினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசுகையில், நீர் நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும், என்றார்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் முன்னிலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் சேலம் வெஜ்ஜீஸ் என்ற அலைபேசி புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நேரடியாக வாங்கி முகவர்கள் உதவியுடன் பொதுமக்கள் வீடுகளுக்கே கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை மாவட்ட கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து கையேட்டை வழங்கி தொடங்கிவைத்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற விளைபொருட்களை நியாயமான விலையில் நேரடி விற்பனை செய்யப்படும் வகையில் சேலம் வெஜ்ஜீஸ் எனும் அலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலம் மாநகர மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாநகர பொதுமக்கள் இந்த வெஜ்ஜீஸ் செயலியை பதிவிறக்கம் செய்து தேவையான விவசாய விளைபொருட்களை நேரடியாக பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.