வேளாண்மை துறை சார்ந்த மானியங்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்ந்த மானியங்கள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
வேளாண்மை துறை சார்ந்த மானியங்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், வேளாண் இணை இயக்குனர் சுசீலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம், தோட்டக்கலை துணை இயக்குனர் அண்ணாமலை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- மாவட்டத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வீணாகாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் முக்கியமான 4 நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இவற்றில் மாரியம்மன் கோம்பை அணைக்கட்டு திட்டத்திற்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது. என்ணேகொல்புதூர் திட்டம் உள்ளிட்ட மற்ற பெரிய திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வத்தல்மலையில் இருந்து மழைநீர் கால்வாய்கள் மூலமாக தர்மபுரியில் உள்ள அன்னசாகரம் ஏரிக்கு வரும். அதன்பின்னர் அங்கிருந்து சனத்குமார் நதி வழியாக கம்பைநல்லூர் வரை சென்று தென்பெண்ணையாற்றுடன் கலக்கும். சனத்குமார் நதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அன்னசாகரம் ஏரியை தூர்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காட்டுப்பன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கால்நடைகள் வளர்க்கப்படும் ஏலகிரி சுற்றுவட்டார கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஏலகிரியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் காலதாமதமின்றி உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:- மாவட்டத்தில் முக்கிய நீர்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த நிலஆர்ஜிதம், திட்டம் அமலாகும் பகுதியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து உள்ளோம். நீர்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு அரசிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம். உரிய அறிவிப்பு வெளியான உடன் திட்ட பணிகள் தொடங்கப்படும்.

சனத்குமார் நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கால்வாயை சீரமைக்கவும் ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நதியை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கும். புலிகரை உள்ளிட்ட 14 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க நிதி கேட்டு அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏலகிரியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்க அந்தந்த துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com