விவசாய சங்கத்தினர், உயர் அதிகாரிகளுடன் குமாரசாமி இன்று ஆலோசனை

விவசாய கடன் தள்ளுபடி குறித்து விவசாய சங்கத்தினர், உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இதில் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விவசாய சங்கத்தினர், உயர் அதிகாரிகளுடன் குமாரசாமி இன்று ஆலோசனை
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கூறப்பட்டது. இந்த நிலையில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

சொந்த பலத்தில் ஆட்சி அமைக்காததால், விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் சிக்கல் உள்ளதாக குமாரசாமி கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடக பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவோம் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இதனால் குமாரசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கூறினார். கூட்டணி கட்சியான காங்கிரசுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்திற்கு பிறகு விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com