

சேலம்:
பி.என்.பட்டி, ஏத்தாப்பூர், கெங்கவல்லி, மல்லூர், பனமரத்துப்பட்டி பேரூராட்சி கூட்டங்களில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பி.என்.பட்டி
சேலம் மாவட்டம் பி.என்.பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பொன்னுவேல் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி வனிதா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வை சேர்ந்த ஸ்டாலின், மோகன்குமார், அன்பழகன், அம்பிகா, சுதா, பா.ம.க.வை சேர்ந்த மயில்சாமி, திருமுருகன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
ஏத்தாப்பூர்- கெங்கவல்லி
ஏத்தாப்பூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விழிச்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைள் குறித்து உறுப்பினர்கள் பேசிய போது, அனைத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் அன்பழகன் உறுதி அளித்தார். வீட்டு வரி, சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கெங்கவல்லி பேரூராட்சி கூட்டம் தலைவர் லோகம்மாள் தலைமையில் நடந்தது. தீர்மானத்தை பேரூராட்சி செயல் அலுவலர் ராணி வாசித்தார்.3 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொத்து வரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இளவரசு, ஆறுமுகம் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மல்லூர்
மல்லூர் பேரூராட்சியில் சொத்துவரி உயர்வு குறித்த அவசர கூட்டத்துக்கு தலைவர் லதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அய்யனார், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மற்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபு கண்ணன் செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் கூட்டத்திற்கான அஜந்தாவை வாங்காமலும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலும் புறக்கணித்தனர்.இதனை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர்.