வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
முசிறியில் நடைபெற்ற அ.தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முசிறியில் நடைபெற்ற அ.தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Published on

ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முசிறியில் உள்ள ஒரு மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் எம்.தங்கவேல் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் டி.இந்திராகாந்தி வரவேற்று பேசினார்.

எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, முசிறி எம்.செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பலர் பேசினர்.

ஹாட்ரிக் வெற்றி

கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில், நாம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.(இதற்கு முன்பு அ.தி.மு.க. இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றது). தி.மு.க.வின் மனக்கோட்டையை உடைக்க வேண்டும். அவர்களது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் தகுதியே கிடையாது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இருபெரும் தலைவர்கள்

இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் தமிழகத்தில் கொரோனோ தொற்று பாதிப்பு அதிகம் இல்லை. ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடியே பாராட்டியுள்ளார்.

ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலை நாம் சந்திக்க போகிறோம். பலமுனை போட்டி இருக்கலாம். ஆகவே, நாம் அனைவரும் ஒற்றுமையோடு கோஷ்டி பூசலை மறந்து தேர்தல் பணியாற்றினால் வெற்றி பெறலாம். தற்போது ஒன்றியங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கட்சி நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் சென்று பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா போன்ற மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அதனை அதிகாரிகளிடம் தெரிவித்து முடித்து கொடுத்தால் அது வாக்காக மாறும். பூத் கமிட்டிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். கரூர் பகுதியில் ரூ.406 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்க முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி உள்ளார்.

அடுத்து நமது ஆட்சி பொறுப்பேற்றதும் முசிறி பகுதியில் ரூ.500 கோடியில் காவிரியில் தண்ணீர் தேக்கும் வகையில் புதிய கதவணை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானம்

கூட்டத்தில், தமிழகத்தில் புயலின் காரணமாக சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசிய ராசாவிற்கு கண்டனம் தெரிவிப்பது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக முசிறி தொகுதி சார்பில் அமைச்சருக்கு, செல்வராஜ் எம்.எல்.ஏ. போர்வாளை நினைவு பரிசாக வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி, இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பேட்டரி பஸ் வசதி

பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அனைத்து கட்சிகளின் வாக்கும் பிரியும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான போக்குவரத்து சேவை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் பேட்டரி பஸ் வசதி தொடங்கப்படும். அதற்காக 12 ஆயிரம் பஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com