

அ.தி.மு.க-தி.மு.க. வாக்குவாதம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு அ.தி.மு.க. பேனர்களை வைத்து அக்கட்சியினர் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
இதையறிந்து அங்கு வந்த ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் தலைமையிலான தி.மு.க.வினர், அ.தி.மு.க. பேனரை வைத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ஆனாலும் அ.தி.மு.க.வினர் பேனரை அகற்றாததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர், தா.மோ.அன்பரசன் தலைமையில் ரேஷன் கடை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு வைக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க. பேனர்களை போலீசார் அகற்றினர்.
பின்னர் தி.மு.க.வினர் சாலை மறியலை கைவிட்டனர். பொங்கல் பரிசு தொகுப்புகளை அ.தி.மு.க. பேனர் வைத்து கொடுக்க கூடாது. மீறி நடந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தி.மு.க.வினர் தெரிவித்தனர்.