

மும்பை,
மும்பையில் பெருகி வரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், கட்டிடப்பணிகள் போன்றவற்றால் காற்று அதிகளவு மாசு அடைந்துள்ளது. எனினும் டெல்லி அளவிற்கு மும்பையில் காற்று மாசு ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று முன் தினம் மும்பையில் காற்று மாசு அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். காற்று தரம் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பு (எஸ்.ஏ.எப்.ஏ.ஆர்.) வெளியிட்டுள்ள தகவலில் நேற்று முன் தினம் மும்பையில் காற்று மாசு 203 ஏ.க்யூ.ஐ. இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக காற்று மாசு அளவு 100 முதல் 200 ஏ.க்யூ.ஐ. வரை இருக்கலாம். அதற்கு மேல் காற்று மாசு ஏற்படும் போது அது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தநிலையில் இதுகுறித்து காற்று மாசு ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில் நேற்று முன் தினம் மும்பையில் வெப்பநிலை மிக குறைவாக இருந்தது. இதுவும் காற்று மாசுக்கு ஒரு காரணம். மும்பையில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்தால் காற்று மாசு குறையும் இவ்வாறு அவர் கூறினார்.