சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்காததால் காற்று மாசு 75 சதவீதம் குறைந்தது: அதிகாரிகள் தகவல்

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்காததால் காற்று மாசு 75 சதவீதம் குறைந்துள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்காததால் காற்று மாசு 75 சதவீதம் குறைந்தது: அதிகாரிகள் தகவல்
Published on

சேலம்,

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வாகனங்கள், ரெயில்கள் ஓடவில்லை. இதனால் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காற்று மாசுபடுவதில் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊரடங்கு உத்தரவையொட்டி வாகனங்கள் ஓடாததாலும், தொழிற்சாலைகள் இயங்காததாலும் காற்று மாசுபடுதல் சேலம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் மேட்டூரில் உள்ள சிட்கோ தொழிற்சாலை, மேட்டூர் ராமன் நகர் வீட்டு குடியிருப்பு பகுதி மற்றும் சேலம் மெய்யனூர் ஆகிய இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் காற்று மாசு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை துகள்களாக உருவாகின்றன. ஒவ்வொரு துகளும் மைக்ரான் என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் 2 மைக்ரான் அளவுக்கு உள்ள துகள் தான் நுரையீரல் வரை செல்கின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கருவிகளின் அளவீடுகளின் படி ஊரடங்கு உத்தரவு காலத்தில் காற்று மாசுபடுவது படிப்படியாக குறைந்துள்ளது. இது குறித்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

காற்றில் 2 விதமான துகள்கள் பரவுகின்றன. ஒரு வித துகள் நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்து நுரையீரல் வரை செல்லக்கூடியது. அதை ஆர்.எஸ்.பி.எம். என்று அழைக்கப்படும். மற்றொரு துகள் எஸ்.பி.எம். இதுவும் காற்றில் கலந்திருக்கும். பின்னர் அது பூமியின் மேற்பகுதியில் படிந்துவிடும். ஆண்டுக்கு 104 முறைதான் காற்று மாசுபடுவது குறித்து கணக்கிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். பொதுவாக அந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையால் காற்று மாசுபடுவது என்பது 100 சதவீதத்தை தாண்டியிருக்கும். ஆனால் தற்போது ஊரடங்கையொட்டி பெரும்பாலான வாகனங்கள் சாலையில் ஓடாததாலும், தொழிற்சாலைகள் இயங்காததாலும் சேலம் மாவட்டத்தில் காற்று மாசுபடுவது என்பது 75 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு தூய்மையான பிராணவாயு கிடைக்கிறது. மேலும் காற்றில் உள்ள தூசியின் அளவு குறைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர்கள் கூறினர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com