2–வது நாளாக ஏர்செல் சேவை பாதிப்பு: பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருச்சியில் 2–வது நாளாக ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2–வது நாளாக ஏர்செல் சேவை பாதிப்பு: பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Published on

திருச்சி,

தமிழகத்தில் முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் சேவை கடந்த சில நாட்களாக நெட்வொர்க் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். திருச்சியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகிலும், உறையூர் சாலைரோடு பகுதியில் உள்ள ஏர்செல் சேவை மைய அலுவலகங்களை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2வது நாளாக அந்த அலுவலகங்களின் முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். செல்போன் சேவை முடங்கியதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வங்கி பரிவர்த்தனை, கியாஸ் இணைப்பு பெறுவது என அனைத்துக்கும் குறிப்பிட்ட செல்போன் எண்களை தான் கொடுத்து இருப்பதாகவும், தற்போது சேவை முடங்கி உள்ளதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கூறினர். இதனை தொடர்ந்து அந்த அலுவலகங்களுக்கு போலீசார் அதிக அளவில் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள மாவட்ட முதன்மை பொது மேலாளர் அலுவலகம், மேலப்புலிவார்டு சாலையில் உள்ள மெயின்கார்டு கேட் தொலைபேசி நிலையம் ஆகியவற்றில் ஏர் செல் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து தாங்கள் ஏற்கனவே வைத்து இருக்கும் அதே எண்ணை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

மேலும் சிலரோ உரிய ஆவணங்களை கொடுத்து புதிதாக பி.எஸ்.என்.எல். சிம் கார்டு வாங்குவதற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com