ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் ஆயிரங்கால் மண்டபம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் ஆயிரங்கால் மண்டபம்
Published on

திருச்சி,

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. மறு நாள் பகல் பத்து உற்சவம் தொடங்கியதால் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நம்பெருமாளை தரிசித்து வருகிறார்கள்.

ஆயிரங்கால் மண்டபம்

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை திறக்கப்படுவதையொட்டி நேற்று இரவு கோவில் கோபுரங்கள் அனைத்தும் மின்னொளியில் ஜொலித்தன. சொர்க்கவாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள மணல் வெளியில் நம்பெருமாள் சுற்றி சுற்றி சேவை சாதிக்கும் இடத்தில் கீற்று பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

உடல் வெப்ப பரிசோதனை

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று அதிக அளவில் கோவிலுக்கு வந்தனர். முக கவசம் அணிந்து வந்த அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் வளாகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com