வீடுகளுக்கு மது சப்ளை திட்டம்: உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு

ஆன்-லைன் மூலம் வீடுகளுக்கு மது சப்ளை செய்யும் திட்டத்திற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு மது சப்ளை திட்டம்: உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. எனவே பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்-லைன் மூலம் வீடுகளுக்கே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.

எனினும் அவர் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து கூற மறுத்துவிட்டார்.

ஆனால் இதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மறுத்தார். ஆன்-லைன் மூலம் மதுவை வீடுகளுக்கு வினியோகிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மழைபொழிவு போதுமான அளவு இல்லாததால் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அந்த உதவி மதுபானத்தை வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பதாக இருக்கக்கூடாது.

ஆன்-லைன் மூலம் வீடுகளுக்கு மது விற்பனை மாநில கலாசாரத்திற்கு ஒருபோதும் பொருத்தமாக இருக்காது. தினம்தினம் மாநிலத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் வகையில் ஆளும் அரசு எதையாவது செய்துவிடுகிறது.

மரத்வாடா மண்டலம் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உதவிக்காக வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு அரசு தள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com