செப்டம்பர் 15-ந் தேதி முதல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; முதல்-அமைச்சருக்கு குமரி அனந்தன் கோரிக்கை

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த, வரும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் 15-ந் தேதி முதல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; முதல்-அமைச்சருக்கு குமரி அனந்தன் கோரிக்கை
Published on

விருதுநகர்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, ராஜாஜி ஆகிய தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தற்போது காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய பின்பு மது விலக்கை அமல்படுத்தக்கோரி முதல்-அமைச்சரிடம் கொடுக்க உள்ள மனுவை காமராஜர் சிலைக்கு முன்பு வைத்தேன். இதன் பின்னர் பக்தவச்சலம், அண்ணா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளேன்.

1917-ம் ஆண்டு முதன் முதலில் சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி. அதனால் சேலத்தில் இருந்து தொரப்பள்ளி வரை 250 கிலோ மீட்டர் தூரம் மதுவிலக்கை வலியுறுத்தி பாத யாத்திரை சென்றேன். அதில் இருந்து மதுவிலக்கை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறேன். பிரதமர் மோடி 36 மசோதாவை நிறைவேற்றி உள்ளார். நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த 37-வது மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று வருகிற சுதந்திர தினத்தன்று அறிவிக்க கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுக்க உள்ளேன். ஏனெனில் 1967-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சர் ஆனபோது மக்களுக்கு இலவசங்களை வழங்க நிதி ஆதாரத்திற்கு என்ன செய்யலாம் என அதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது அதிகாரிகள் மதுக்கடைகளை திறந்தால் நிதி கொட்டும் என கூறினார்கள். ஆனால் அண்ணா என் ஆட்சியே போனாலும் சரி மதுக்கடைகளை திறக்கமாட்டேன் எனக்கூறியதோடு பெருந்தலைவர் காமராஜர் பிற மாநிலங்களுக்கு மது விலக்கு பிரசாரத்திற்கு சென்றால் அவருடன் நானும் செல்வேன் எனக்கூறினார். அதனால்தான் அண்ணா பிறந்த நாளன்று மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தார். நான் அதில் கலந்து கொண்டேன். அப்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதன் பின்பு பேசிய எம்.ஜி.ஆர்., குமரி அனந்தனின் கோரிக்கையில் நியாயம் இல்லாமல் இல்லை என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திரத்தினத்தன்று இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலம், 5 ஏக்கர் புஞ்சைநிலம் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

எனவேதான் விருதுநகரில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைக்கிறேன். அவரை சந்தித்து மனுவும் கொடுக்க உள்ளேன். வரும் சுதந்திரதினத்தன்று அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், விருதுநகர் நகரசபை முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலுமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் நாகேந்திரன், வள்ளிக்குட்டி ராஜா, திலக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com