அதிகமாக தண்ணீர் வருவதால் 100 இடங்களில் ஆறு, பாசன வாய்க்கால்களில் எச்சரிக்கை பலகை

ஆறுகளில் அதிகமாக தண்ணீர் வருவதால் குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என 100 இடங்களில் ஆறு, பாசன வாய்க்கால்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக தண்ணீர் வருவதால் 100 இடங்களில் ஆறு, பாசன வாய்க்கால்களில் எச்சரிக்கை பலகை
Published on

தஞ்சாவூர்,

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் கடந்த 19-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேலும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 75 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக இருப்பதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கல்லணைக்கால்வாய், காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வழக்கமாக பொதுமக்கள் இறங்கி குளிக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 100 இடங்களில் இது போன்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை தாலுகாவிற்குட்பட்ட இடங்களில் மட்டும் 35 இடங்களில் இது போன்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தாலுகாவிற்குட்பட்ட ஆலக்குடி பாலம், வண்ணாரப்பேட்டை பாலம், மானோஜிப்பட்டி பாலம், ரெட்டிப்பாளையம் பாலம், பெரியகோவில் பாலம், எம்.கே.மூப்பனார் சாலை பாலம், உள்பட தஞ்சை நகரம் முழுவதும் தாலுகா அலுவலகம் சார்பில் 20 இடங்களிலும், பொதுப் பணித்துறை சார்பில் 15 இடங்களிலும் இந்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த பலகையில், ஆறுகளில் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் வேகமாக வருகிறது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். மேலும் புகைப்படம் எடுக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com