

இதேபோல, பள்ளிகளை பொறுத்தவரை கடந்த மாதம் 19-ந் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. விடுதிகளும் இயங்க தொடங்கின.
இந்நிலையில் ஊரடங்கில் இருந்து மேலும் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 8-ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளை திறப்பதற்கும், பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளை மட்டும் திறப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்தது.
கல்லூரிகள் திறக்கப்பட்டன
இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. திருச்சியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சீனியர் மாணவிகளும், ஆசிரியர்களும் பூக்கள் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு முதலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் அவர்களது பெற்றோருடன் வந்தனர். சிலர் பெட்டி மற்றும் பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர். மாணவ-மாணவிகள் வருகையை தொடர்ந்து திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கல்லூரி நேற்று காலை பரபரப்புடன் காணப்பட்டது. மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு வசதியாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோல் சத்திரம் பஸ் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், கருமண்டபம் பகுதியில் உள்ள கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.