கிரு‌‌ஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது

கிரு‌‌ஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று தொடங்கியது.
கிரு‌‌ஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 27-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். விழாவில் பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

மேலும் அரசு துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த 50 அரங்குகளை அவர் பார்வையிட்டு திறந்து வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் திட்ட விளக்கவுரையாற்றினார். ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 86 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 75 ஆயிரத்து 705 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..

மா ரகங்கள்

இந்த கண்காட்சியில் மா போட்டி அரங்கில், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் என மொத்தம் 250 விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த மாங்கனிகளை காட்சிக்காக வைத்திருந்தனர். அதன்படி அல்போன்சா, சிந்து, ரத்னா, மல்லிகா உள்பட 40 வகையான மா ரகங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தமிழகம், ஆந்திரா மாநில அரசு பண்ணைகளில் விளைவிக்கப்பட்ட 22 ரக மா வகைகளும் இடம் பெற்று இருந்தது. மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் பார்வையாளர்களை கவரும் வகையில் 65 ஆயிரம் மலர்கள் கொண்டு மாம்பழம், பென்குயின், உலக கோப்பை ஆகியவை வடிவமைத்து வைக்கப்பட்டு இருந்தன.

நாடாளுமன்ற முகப்பு வடிவம்

இதேபோல் 14 வகையான நறுமண பொருட்கள் மூலம் 600 கிலோ எடை கொண்ட நாடாளுமன்ற முகப்பு வடிவம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கண்காட்சி தொடர்ந்து 29 நாட்கள் நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com