எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டால் ஏமாற்றங்கள் ஏராளம்..

இது டிஜிட்டல் யுகம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் செல்போன், கணினி திரையில் தெரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டால் ஏமாற்றங்கள் ஏராளம்..
Published on

எந்தவொரு விஷயத்தையும் முன் பின் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்வதோடு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடிகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்கள் சமூகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளலாம். முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். பண உதவி, அவசர உதவி, ரத்ததானம் என எந்தவொரு உதவியாக இருந்தாலும் நொடிப்பொழுதில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நிறை வேற்றிவிடலாம் என நவீன தொழில்நுட்பங்களின் வரப்பிரசாதமாக சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

ஆனால் இன்று சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி வாழ்வின் ஒரு அங்கமாக பாவிப்பவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டு கிறார்கள்.

ஆரம்பத்தில் செல்பி மோகத்தில் விதவிதமாக புகைப்படங் களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களின் லைக் கிடைப்பதற்காக ஏங்கினார்கள். இப்போது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள்.

நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று யாரும் நினைப்பதில்லை. நிறைய பேர் இதை ஒரு சமூக அந்தஸ்தாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

சமூக வலைத்தளங்களால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம் என்று சர்வே கூறுகிறது. சாதாரணமாகவே ஊர்வம்பு பேசுவதில் விருப்பம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் அடுத்தவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.

ஒன்றுமில்லாத விஷயத்தைக் கண், காது, மூக்கு வைத்து உண்மை போலவே சித்தரித்து விடுவார்கள். இது பின்னாளில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் நான்கு பேர் கூடி ஊர் வம்பு பேசும் வேலையை இப்போது சமூக வலைத்தளங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

நிறைய பேர் எதைத் தான் சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்ற வரம்பே இல்லாமல் மனம் போன போக்கிலே விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உருவாகும் பின்விளைவுகள் அவர்களுக்கே தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல.

சமீபகாலமாக அதிகரித்துவரும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு இதுவே காரணம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com