ஏழை குடும்பங்களை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

ஏழை குடும்பங்களை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஏழை குடும்பங்களை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
Published on

சேலம்,

சேலம் நேரு கலையரங்கில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா, பல்வேறு துறைகளின் சார்பில் 34 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற 35 திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், ராஜா, வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி, மனோன்மணி, சித்ரா, மாநில முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.157 கோடியில் கடன் உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிட முடியும் என்பதை உணர்ந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மகளிர் காவல் நிலையம், மகளிர் எழுத்தறிவு திட்டம், மகளிர் தொழில்முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், மகளிர் மேம்பாட்டு கழகம், பெண்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் போன்ற மகளிர் வாழ்வாதார திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.

ஆண்களோடு பெண்களும் சரி சமமாக உயர வேண்டும். அதற்காக சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் புரிந்து வருவாய் ஈட்டி, வறுமை நீங்கி வளமுடன் வாழ்வதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். இந்த குழுக்கள் மூலம் பல்வேறு தொழில்களில் பெண்கள் ஈடுபட்டு, பல பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து தங்கள் வாழ்வாதார நிலையை உயர்த்தி கொண்டார்கள்.

2011 முதல் 2018-ம் ஆண்டு வரை 41 ஆயிரத்து 180 கோடி ரூபாய் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாக திகழ்கிறது. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு சமமாக பணிபுரிந்து சாதனை படைத்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள 2,750 குழுக்களுக்கு ரூ.157 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலம் காக்க மக்கள் நலத் திட்டங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தலைவாசல் கூட்டுரோடு அருகில் 900 ஏக்கர் பரப்பளவில் ரூ.396 கோடியில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தேன். இந்த பூங்கா அமைப்பதன் மூலமாக விவசாயிகள் மிகப் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். வேளாண் பெருமக்கள் உபதொழிலாக கால்நடைகளை வளர்க்கின்றார்கள்.

விவசாயிகளின் வாழ்வு மலரவேண்டும், அவர்களுக்கு கூடுதலான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கால்நடை பூங்காவை அமைக்க இருக்கின்றோம். மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டில் உறை விந்து உற்பத்தி மையம் அந்த வளாகத்தில் அமைக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம், அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் உன்னதமான திட்டம். நம்முடைய தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். இந்தியா முழுவதும் 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைகின்றனர். இது ஒரு வருடம் கொடுப்பது மட்டுமல்ல. இது தொடர்ந்து 5 ஆண்டுகள் வழங்கப்படும் திட்டம்.

ஒவ்வொரு 4 மாத காலத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் என்று, இப்படி 3 தவணையாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அப்படி 5 ஆண்டுகளில் சேர்த்தால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் சென்றடையும். தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறார். இதற்காக தமிழக மக்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள் கிறேன்.

அதேபோல், தமிழக அரசு அனைத்து ஏழை தொழிலாளிகளுக்கும் சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என்று நான்அறிவித்து இருந்தேன். நிறைய பேர், அந்த சிறப்பு உதவி திட்டத்தில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை என்று என்னிடத்திலே கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

இங்கு வருகை தந்திருக்கின்ற அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடமும், மற்ற உயர் அதிகாரிகளிடத்திலும் எடுத்துச் சொல்லி, ஏழை குடும்பத்தை சேர்ந்த தொழிலாளி எவரும் விடுபடாமல் அந்த கணக்கை எடுங்கள். அத்தனை ஏழை குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அரசால், சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால் வேண்டுமென்றே சிலர், பாதி பேருக்குதான் கிடைக்கும், பாதி பேருக்கு கிடைக்காது என்று புரளியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் தவறு. தகுதியான ஏழை குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் கணக்கெடுத்து இந்த ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.

தைப் பொங்கல் அனைத்து இல்லங்களிலும் பொங்க வேண்டும் என்பதற்காக பொங்கல் தொகுப்பு திட்டமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தமிழக அரசு சார்பில் ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்த அரசு ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு. ஏழை மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் சென்று, ஜமுக்காளத்தை விரித்துபோட்டு, அங்கிருக்கும் மக்களையெல்லாம் கூப்பிட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். சேலம் மாவட்டத்தில் 18ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் இருக்கிறது. இந்த விழாவில் 2,709 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.157 கோடி கடனாக வழங்கப்பட்டு சுயமாக தொழில் தொடங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

இப்பொழுது சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்கள் விற்கப்பட்டு, பொருளாதாரம் ஈட்டக்கூடிய நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆகவே, நீங்கள்(மு.க.ஸ்டாலின்) எந்த ஊருக்குச் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையே இல்லை. ஏனென்றால், எல்லா ஊருக்கும் நாங்கள் செய்திருக்கிறோம்.

பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் கொடுக்கின்றோம். தெருவிளக்கு வசதி, சாலை வசதி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் ரெயில்வே கிராசிங் முழுவதிலும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்ட ஒரே மாவட்டம் நமது மாவட்டம் ஆகும். தங்குதடையில்லாமல், விபத்தில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பான சாலை வசதிகள் தமிழ்நாடு முழுவதும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூலமாக மாநில சாலை, மாவட்ட சாலை போன்றவற்றை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக 41 சாலைகளை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அதை கொடுத்து, சுமார் ரூ.50 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை 48.6 சதம் உயர்ந்திருக்கிறது.

இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கையில் உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு தான். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்கின்ற இடத்திலெல்லாம், இந்த ஆட்சியில் ஒன்றும் நடைபெறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அத்தனையும் பொய். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் துணை முதல்-அமைச்சராக இருந்தார். உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். அவர் எத்தனை கிராமத்திற்கு சென்றார்? எத்தனை மக்களை பார்த்தார்? எத்தனை திட்டங்களை நிறைவேற்றினார்? என்று சொல்லமுடியுமா?. ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. அதிகாரம் இருக்கும்பொழுதே மக்களுக்கு அந்த திட்டங்களை செய்யவில்லை.

ஆனால் ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு ஒவ்வொரு கிராமத்திற்கும் என்ன வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தி, அந்த மக்களுக்குத் தேவையான திட்டங்கள் நேரடியாக செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறோம். 50 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினையை அ.தி.மு.க. அரசுதான் தீர்த்தது. காவிரி நதிநீர் பிரச்சினையை உச்சநீதிமன்றத்தில் வாதாடி, சட்ட ரீதியாக நம் விவசாய பெருமக்களுக்கு அந்த உரிமையை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிலேயே தமிழகத்தை ஒரு முதல் மாநிலமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில் முனைவோர்களும், வெளிநாட்டில் இருக்கின்ற பல்வேறு தொழில் முதலீட்டாளர்களும் கலந்து கொண்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.

இதன்மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதைப் பொறுக்க முடியாமல்தான் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரோட்டில் போகிறவர்கள், வருபவர்களுக்கெல்லாம் பேண்ட், சூட் போட்டு அங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள் என்று கிண்டல் பேசிக் கொண்டிருக்கிறார். எந்தளவுக்கு தொழில் முதலீட்டாளர்களை கொச்சைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க இருக்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில், பல்வேறு துறைகள் மூலம் 43 ஆயிரத்து 274 பயனாளிகளுக்கு ரூ. 164.77 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கூட்டுறவு வங்கி தலைவர்கள் செல்வராஜ், சதீஸ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.சேகரன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com