முறையற்ற வகையில் நடக்கும் அனைத்து பணியிட மாறுதல்களையும் நிறுத்த வேண்டும்

ஆண்டு முழுவதும் முறையற்ற வகையில் நடைபெற கூடிய அனைத்து பணியிட மாறுதல்களையும் நிறுத்த வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முறையற்ற வகையில் நடக்கும் அனைத்து பணியிட மாறுதல்களையும் நிறுத்த வேண்டும்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். மாநில பொது செயலாளர் தாமோதரன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் யூ.ஜி.சி.யின் 7-வது ஊதியக்குழுவின் பணிவரன் நெறிமுறைகளை அரசு ஆணையாக உடனடியாக வெளியிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 101, 102-ல் உள்ள குறைபாடுகளை களைந்து, பணி மேம்பாடு ரூ. 6 ஆயிரத்திலிருந்து ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 7 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரம் தர ஊதியம் வழங்க வேண்டும். அதற்குரிய நிலுவை தொகையினை விரைவாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வது.

ஆண்டு முழுவதும் முறையற்ற வகையில் நடைபெறும் அனைத்து பணியிட மாறுதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கிராமப்புற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நலன் கருதி அனைத்து அரசு கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கும் மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் உரிய காலிப்பணியிடங்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கு அரசாணை வெளியிட வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி ஆணை வழங்கிட வேண்டும். 1.1.2004-க்கு பின்னர் பணியில் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பணிக்கொடையை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com