

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் இருந்து கிளம்ப வேண்டிய சீன விமானம், பனிப்புயல் காரணமாகத் தாமதமானது. நேரம் செல்லச் செல்ல.. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள், வேறு விமானங்களில் ஏறிச் சென்றுவிட்டனர்.
10 மணி நேரங்களுக்குப் பிறகு விமானம் கிளம்பத் தயாரான போது, ஸாங் என்ற ஒரே ஒரு பெண் பயணி மட்டுமே எஞ்சியிருந்தார். அவர் ஒருவரை மட்டும் ஏற்றிக்கொண்டு விமானம் பறந்தது. தன்னந்தனியாக பயணிக்க இருக்கும் விஷயம், விமானத்தில் ஏறிய பிறகு தான் ஸாங்கிற்குத் தெரிந்ததாம். அதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருக்கிறார். விமானப் பணிப்பெண்களுடன் செல்பி எடுப்பது, தனி ஆளாக தின்பண்டங்களை நொறுக்குவது, அதை வீடியோ எடுப்பது என தனிமைப் பயணத்தை, இனிமைப் பயணமாக மாற்றியிருக்கிறார். அதுமட்டுமா? பைலட்டுடன் ஆரஞ்சுப் பழங்களைப் பகிர்ந்து கொள்வது, பல்வேறு இருக்கைகளில் உட்கார்ந்து பார்ப்பது என ஸாங்கின் விளையாட்டிற்கு அளவில்லாமல் போய்விட்டது.
விமானத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார். அதை வீடியோ எடுத்ததுடன், கீழே இறங்கியதும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளையும் அள்ளியிருக்கிறார்.