ஊதியக்குழு அமல், புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஐகோர்ட்டில், அரசு அளித்த தகவல் ஏமாற்றம் அளிக்கிறது

ஊதியக்குழு அமல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஐகோர்ட்டில் அரசு அளித்த தகவல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றது என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.
ஊதியக்குழு அமல், புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஐகோர்ட்டில், அரசு அளித்த தகவல் ஏமாற்றம் அளிக்கிறது
Published on

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் சண்முகராஜன் கூறியதாவது:

என்.ஜி.ஓ. யூனியன், அரசு அடிப்படை பணியாளர் சங்கம், ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை இணைந்த கூட்டமைப்பினர் கடந்த மே மாதம் ஊதிக்குழு முரண்பாடுகளை களைதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நிதி அமைச்சரை சந்தித்து பேசினோம். இதனைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் முதல்அமைச்சரை சந்தித்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதல்அமைச்சரும் இம்மாத இறுதியில் ஊதிக்குழு முரண்பாடுகளை களைந்து அமல்படுத்துவதாகவும், நவம்பர் மாத இறுதியில் ஓய்வூதிய திட்டக்குழுவின் ஆய்வினை பெற்று சாதகமான முடிவினை அறிவிப்பதாகவும் உறுதியளித்தார்.

இதற்கிடையில் ஜாக்டோஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் நிதித்துறை ஊதிக்குழு முரண்பாடுகளை களைந்து அமல்படுத்த 4, 5 மாத கால அவகாசம் வேண்டும் என்றும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி ரூ.18 ஆயிரத்து 16 கோடி அரசு பொது நிதியில் உள்ளதாகவும், இந்த தொகையினை மத்திய ஓய்வூதிய திட்ட ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். ஜெயலலிதா வழியில் நடந்து வருவதாக கூறப்படும் முதல்அமைச்சர் அவர் அளித்த உறுதியினை நிறைவேற்றித்தர வேண்டும். இந்த கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜாக்டோஜியோ அமைப்புடன் இணைந்து அக்டோபர் 15ந்தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தொகை ரூ.18 ஆயிரத்து 16 கோடியை மத்திய அரசிடம் செலுத்தி விட்டால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாமல் போய் விடும். முதல்அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோதே புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லாமல் போய் விட்டது. எனவே இப்போதுள்ள முதல்அமைச்சராவது அவர் உறுதியளித்தபடி ஊதிக்குழு முரண்பாடுகளை களைந்து இம்மாத இறுதியில் அதனை அமல்படுத்த வேண்டும் என்றும், டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான ஓய்வூதிக்குழுவின் ஆய்வறிக்கையினை பெற்று நவம்பர் இறுதிக்குள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அரசு அலுவலர் ஒன்றியம், அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக செயல்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிடித்தம் செய்யும் தொகையை குறைக்க வேண்டும், மாநில, மாவட்ட, துறை அளவில் கூட்டுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com