மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆம்புலன்ஸ் மீது கல்வீச்சு-போலீஸ் தடியடி

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் தேர்தல் அலுவலர் மயக்கம் அடைந்ததால் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் மீது கல்வீசினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆம்புலன்ஸ் மீது கல்வீச்சு-போலீஸ் தடியடி
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலின் முடிவில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரும், பா.ம.க.வை சேர்ந்த 3 பேரும் வெற்றி பெற்றனர். தி.மு.க.வை சேர்ந்த 4 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற 6 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் 4 ஒன்றிய கவுன்சிலர்களும், தி.மு.க. கூட்டணியில் 5 ஒன்றிய கவுன்சிலர்களும் உள்ளனர். தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. 4 கவுன்சிலர்கள் உள்ள தி.மு.க.வினர் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவை பெற்று ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டனர்.

உடல் நலக்குறைவு

மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பங்கேற்க நேற்று 10 கவுன்சிலர்களும் சென்றனர். அங்கு ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சுமதியும், அ.தி.மு.க. சார்பில் கூட்டணியில் உள்ள பா.ம.க.வை சேர்ந்த பெருமாளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கு மறைமுக வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் திடீர் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரான குமரேசன் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக கூறினார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் தேர்தல் அலுவலரை ஏற்றினார்கள்.

சாலை மறியல்

இதனால் ஆவேசமடைந்த தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியே செல்ல முயற்சிப்பது ஏன்? எனக்கூறி ஆம்புலன்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்காமல் செல்லக்கூடாது என மொரப்பூர் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவுகளை சிலர் கழற்றி வீசினார்கள். இதையடுத்து தேர்தல் அலுவலர் குமரேசன் போலீஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் திரண்டிருந்தவர்களில் சிலர் ஆம்புலன்ஸ் மீது கல்வீசினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். கல்வீச்சு மற்றும் தடியடி சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர்.

தேர்தல் நிறுத்தி வைப்பு

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் மொரப்பூர் பகுதியில் அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தகராறு காரணமாக மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com