காதல் திருமணம் செய்த 2 வாரத்தில் ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி; மனைவி படுகாயம்

காதல் திருமணம் செய்த 2 வாரத்தில், ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
காதல் திருமணம் செய்த 2 வாரத்தில் ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி; மனைவி படுகாயம்
Published on

வீரபாண்டி,

காதல் திருமணம் செய்து 2 வாரங்களே ஆன நிலையில் ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மாசானமுத்து. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 28). இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த மகாலட்சுமி நகரில் தங்கி ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகள். பவித்ரா (21) என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டார் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. பின்பு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அவர்கள் பல்லடத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் காதலர் தினம் என்பதால் இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தியேட்டருக்கு இரவு சினிமா பார்க்க சென்றனர்.

பின்னர், நள்ளிரவில் படம் முடிந்து அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வீரபாண்டி பிரிவு அருகில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, பல்லடத்தில் இருந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. மேலும் வீரபாண்டியில் இருந்து வேன் ஒன்று திருப்பூருக்கு வந்துள்ளது.

ஆம்புலன்ஸ் வருவதை கவனித்த வேன் டிரைவர், வேனை திடீரென நிறுத்திவிட்டார். ஆனால் மோட்டார் சைக்களில் வேகமாக வந்த தினேஷ்குமார், ஆம்புலன்ஸ் வருவதற்குள் செல்லமுயன்றதாக தெரிகிறது. அப்போது ஆம்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு அதே ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 2 வாரத்தில், காதலர் தினத்தன்று விபத்தில் சிக்கி வாலிபர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com